டில்லியில் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற மின்சார விநியோகம், போதுமான குடிநீர் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளதாக கவர்னர் சக்சேனா வெளியிட்ட வீடியோவிற்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால், இப்பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அதிஷி உள்ளார். டில்லியில் கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் சில பகுதிகளில் ஆய்வு செய்த கவர்னர் வி.கே.சக்சேனா, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ‘ ஆம் ஆத்மி ஆட்சியில் மிக மோசமான நிலை’ எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மீண்டும் தலைநகரில் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவற்ற நிலையையும், பரிதாபமான வாழ்க்கையையும் கண்டது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தெருக்களில் நிரம்பி வழியும் சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுகிறது. டில்லியைச் சேர்ந்த பெண்கள் தங்களது பிரச்னைகளையும், மனதை கனக்கச் செய்யும் துன்பங்களையும் கூறுகின்றனர். நான் சென்ற பகுதிகளில் முறையான கழிவுநீர் வசதி இல்லை. இதனால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. முறையான மின்சாரம் வரவில்லை. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. 7 – 8 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீர் லாரிகளையே நம்பி உள்ளனர்.
இங்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மைப்பணிகள் விரைவில் செய்து தரப்படும். இதற்கான பணிகளை நானே நேரடியாக கண்காணிப்பேன். முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், இந்த பகுதிகளுக்கு சென்று, மிக மோசமான அவல நிலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதனை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சக்சேனா கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களிடம் உள்ள குறையை சுட்டிக்காட்டிய கவர்னர் சக்சேனாவிற்கு எனது மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த குறைகளை சரி செய்ய தேவையான நடவடிக்கையை எடுப்போம். முன்னர், அவர் சுட்டிக்காட்டிய பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனை முதல்வர் அதிஷி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். கவர்னர் தற்போது சுட்டிக்காட்டிய பகுதிகளில் தூய்மைப்பணி விரைவில் துவங்கும். எங்களின் குறைபாடுகளை கவர்னர் தொடர்ந்து சுட்டிக்காட்டினால், அதனை சரி செய்து கொள்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.