உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன்-ஹனுமான் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் மாவட்டத்தின் சந்தௌசி பகுதியில் படிக்கட்டுக் கிணறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பாலின் மாவட்ட நீதிபதி ராஜேந்திர பென்சியா 400 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கிணறு கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது: சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவில், இந்த கிணறு கண்டறியப்பட்டது. பிலாரி மன்னரின் தாத்தாவின் மன்னர் காலத்தில் இந்த கிணறு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கிணற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளம் பளிங்கு கற்களாலும், மேல் தளங்கள் செங்கற்களால் ஆனவை. கிணற்றை சுற்றி நான்கு அறைகள் உள்ளன. இந்த அமைப்பு 150 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: முழு கட்டமைப்பையும் வெளிக்கொணர அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது, மாநகராட்சி கு’ழுவினர் மேல்மண்ணை அகற்றி வருகின்றனர். தற்போது 210 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே வெளியில் உள்ளது. மீதி ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அப்பகுதியில் உள்ள மாநகராட்சி அதிகாரி கூறுகையில், பூமிக்கடியில் உள்ள அமைப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன் பணியை தொடங்கினோம். தொடர்ந்து பணியைத் தொடரும்போது, இது பற்றி மேலும் தெரியவரும். இதை மீட்டெடுக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம், என்று கூறினார்.
இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் குழு (ஏஎஸ்ஐ) சம்பலில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் ஆய்வு நடத்தியது, ஏஎஸ்ஐயின் நான்கு பேர் கொண்ட குழு சம்பாலில் உள்ள ஐந்து ‘தீர்த்தங்கள்’ மற்றும் 19 கிணறுகளை ஆய்வு செய்தது.