நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக நாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் கூறினார்
இதுகுறித்து அவா் கூறியதாவது: நாகை மற்றும் அண்டை டெல்டா மாவட்டங்களில் வா்த்தகத்தை புதுப்பிக்கும் முயற்சியில், நாகை மாவட்ட நிர்வாகம் ஜனவரி கடைசி வாரத்தில் நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே சிறிய சரக்கு சேவையை தொடங்க உள்ளது.
இந்த சேவையில் 150-200 டன்கள் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட சிறிய சரக்கு கப்பல்கள் இயக்கப்படவுள்ளன. இதில், மளிகைப் பொருள்கள், ஆடைகள் மற்றும் விவசாயப் பொருள்களை கொண்டு செல்ல முடியும்.
முதல்கட்டமாக, வாரத்துக்கு ஒருமுறை ஜனவரி இறுதி வாரம் முதல் போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில், போக்குவரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகை துறைமுகத்தின் வா்த்தக திறனைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு கடல்சாா் வாரியம் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளது. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளும், திருச்சி மற்றும் திருவாரூா் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த சிறு, குறு நிறுவனங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆா்வம் காட்டியுள்ளன.
தொழிலதிபா்களுடனான அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 15 முதல் 20 நிறுவனங்கள், நாகையிலிருந்து இலங்கைக்கு போக்குவரத்து சேவையை தொடங்குவதில் உற்சாகமாக உள்ளனா். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரிசி, ஆடைகள், மளிகைப் பொருள்கள் மற்றும் பிற பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை அனுப்ப தயாராக உள்ளன. இச்சேவை மூலம் உள்ளூா் தொழில்கள் மேம்படும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புகள் உயரும் என்றார்