– டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை கடந்த மார்ச்சில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டது. டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையின் முடிவில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து கடந்த 16ம் தேதி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்டோரது வீடுகளில் சோதனை நடந்தது. விசாகனை அழைத்து 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் துணைப் பொதுமேலாளர் ஜோதி சங்கரிடமும் விசாரணை நடந்தது.
இ.டி சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, சட்டவிரோத பணபுழக்கம் தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறைக்கு நடவடிக்கையைத் தொடர அனுமதியும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (மே 22) தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிடுகையில், ”2014-21ம் ஆண்டு வரையிலான விற்பனையில் முறைகேடு தொடர்பாக மாநில அரசே, 41 வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி உள்ளனர். அதிகாரிகளின் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளனர்” என தெரிவித்தார்.
டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், ”டாஸ்மாக் அதிகாரிகளின் போன்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவற்றில் இருந்த தகவல்கள் அனைத்தையும் நகல் எடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்களது தனியுரிமை பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ வாதிடுகையில், ”இது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு. அதனால் தான் விசாரிக்க வேண்டியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மோசடி. அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகின்றனர்,” என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி, ”மாநில அரசு தான் வழக்குகள் பதிவு செய்துள்ளதே? அமலாக்கத்துறை ஏன் தேவையின்றி வருகிறது. இதற்கான மூலக்குற்றம் எங்கே,” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி கவாய் பெஞ்ச் கூறியதாவது: முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்?
அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது. தனி நபர்கள் செய்த தவறுக்காக அரசு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? நாட்டின் கூட்டாட்சி நடைமுறைகளை அமலாக்கத்துறை மீறுகிறது. டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.