புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் நானும் என் கவிதையும்.
திருவிழாக்களை
தெரிவித்த புத்தகங்களுக்கு
இன்று
திருவிழா நடக்கிறது
இங்கு
தெம்மாங்கும்
தெருக்கூத்தும்
சேர்ந்தே
வாழ்த்துப் பா பாடுகிறது
பள்ளியும் ,கல்லூரியும்
பந்தக்கால் ஊன்ற
படிக்கும்
மாணவர்களேல்லாம்
பட்டாசு வெடிக்க
அல்லும் பகலும்
இங்கே
ஆலாபனை நடக்கிறது
அச்சடித்த புத்தகமே
ஆண்டவனாய் இருக்கிறது
நாடகங்கள் நடக்குது
நாட்டியங்களும் சிறக்குது
ஊர்கூடிதானே
இந்த
புத்தகத்தேரை இழுக்குது
ஊடகங்கள் தினந்தோரும்
உலகிற்கு
உண்மை நிலை
உரைக்குது
புத்தகம்…..
அறிவுக்கலஞ்சியம் இது
அமிர்தம் இது
ஊனுக்கு மருந்து இது
உரைகல் இது
வானுக்கு வழி இது
வாடாத மலர் இது
தேன் இது
தெவிட்டாத திரவியம் இது- வாழ்க்கை
திறவுகோல் இது!
படித்தால்
ஞானி ஆகலாம்
படிப்பவனுக்கு
ஏணி ஆகலாம்
இலக்கை எட்ட பயணிக்கும்
தோணியாகலாம்
இலக்கியத்தை படைக்கும்
எழுத்தாணி ஆகலாம்
இமயமாகலாம்
பிறர்
இதயமாகலாம்
நாளைய உலகிற்கு
நீயே
உதயமாகலாம்!
ஆகவே
புத்தங்களை வாசிப்போம்
புத்தகங்களை நேசிப்போம்
புத்தகங்களையே
தினம்
சுவாசிப்போம்!!!!
….மருத்துவர் மு.பெரியசாமி,
புதுக்கோட்டை