உலக அளவில் 40 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஈரோட்டில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ஈரோடு சுதா பல துறை மருத்துவமனை, சுதா கேன்சர் மருத்துவமனை , இந்திய மருத்துவச் சங்கம் , ஈரோடு செல்வா சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் நந்தா நர்சிங் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
பேரணிக்கு ஈரோடு சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.சுதாகர் தலைமை வகித்தார். இந்திய மருத்துவச் சங்க ஈரோடு கிளைத் தலைவர் டாக்டர் செந்தில்வேலு முன்னிலை வைத்தார் . சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் நந்தா நர்சிங் கல்லூரி மாணவிகள் , ஈரோடு சுதா மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் பங்கேற்று கலந்துகொண்டு மார்பகப் புற்றுநோய் குறித்த வாசகங்களை அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.
ஊர்வலம் ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தொடங்கி பெருந்துறை ரோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சம்பத் நகரில் உள்ள ஈரோடை மஹாலில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ஈரோடு சுதா பலதுறை மற்றும் கேன்சர் மருத்துவமனை மருத்துவர் எஸ் .பிரதீபா பேசும்போது:
உலக அளவில் 40 பெண்களில் ஒருவர் வீதம் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் புற்று நோய்க்கான அறிகுறி தென்பட்டால் அதை வெளியே சொல்ல பல பெண்கள் தயங்குகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால் முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியும்.
இது தொடர்பான விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் நர்சிங் மாணவிகளான நீங்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.மார்பக புற்றுநோய் குறித்து ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு அதன் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இது தொடர்பாக பெண்கள் மெமோகிராம் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்வது நல்லது. மரபு ரீதியாகவும் இந்த மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மார்பக புற்றுநோயால் தாயார் பாதிக்கப் பட்டால் அவரது மகளும் இது தொடர்பான பரிசோதனையை அடிக்கடி மேற்கொண்டு சிகிச்சை பெற்று விரைவில் குணமடையலாம் என்றார்.
நந்தா செவிலியர் கல்லூரியின் பேராசிரியை ஹமீதுன்னிசா பேசும் போது, உலகளவில் 11.50 லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள் ளனர்.சிறிய வயதில் பூப்படைவது, பிரசவத்துக்கு பிறகு குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்காதது, சரியான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதது, இதுதவிர சில ஹார்மோன் சுரப்பிகளாலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
மார்பக புற்றுநோய் அறிகுறி தென்பட்டால் அதற்கான “மெமோகிராம்” பரிசோதனைகளை செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.அண்மை காலமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. தற்போது இது குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
மருத்துவர் ஜெ.சுகனேஸ்வரன் மார்பக புற்றுநோய் குறித்து பேசினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேமோகிராம் மருத்துவ ஆலோசனை இலவசமாக அளிக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில், ஈரோடு இந்திய மருத்துவ சங்கச் செயலாளர் டாக்டர் பார்த்திபன் துரைசாமி , இந்திய மருத்துவ சங்கத்தின் பொருளாளர் டாக்டர் கே. அரவிந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு செல்வா சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் பாரதி வரவேற்றார். செல்வா சேரிட்டபிள் டிரஸ்ட் உறுப்பினர் எஸ். ரொசாரியோ நன்றி கூறினார். மருத்துவ முகாம் அக்டோபர் 30 -ஆம் தேதி வரை நடைபெறுவதாக ஈரோடு சுதா மருத்துவம னை நிர்வாக இயக்குனர் கே.சுதாகர் தெரிவித்தார்.