Close
நவம்பர் 22, 2024 2:56 காலை

ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடலுறுப்புகள் தானம்

சென்னை

உடலுறுப்புகள் தானம் செய்த முதியவர்

ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டதால்  உயிருக்குப் போராடி வரும் நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச் சாவு ஏற்பட்ட பொன்னேரியைச் சேர்ந்த சண்முகம் என்ற 74 வயது முதியவரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவிற்கு உள்பட்ட புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (74) என்ற முதியவர் திங்கள்கிழமை தன்னுடைய மிதிவண்டியில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.  இருப்பினும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி முதியவர் சண்முகத்திற்கு புதன்கிழமை மூளைச் சாவு ஏற்பட்டது.

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மூளைச்சாவு ஏற்பட்ட முதியவர் சண்முகத்தின்  உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து  வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் மற்றும் எலும்பு உள்ளிட்ட உறுப்புகள் ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மீட்டெடுத்தனர். இருதயம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு இருந்ததால் அகற்றப்படவில்லை.

தானம் செய்யப்பட்ட கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு அரசு வழிமுறைப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துமனையில் உள்ள நோயாளிக்கும், எலும்புகள் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கும் அரசு வழிமுறைப்படி வழங்கப்பட்டது. கண்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவின் சேமிப்பு வங்கியில் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக சேமிக்கப்பட்டு உள்ளது.

முதியவருக்கு மூளைச் சாவு ஏற்பட்ட சோகத்திலும் அவரது உடலுறுப்புகளைத் தானம்  செய்ய  முன்வந்த குடும்பத்தி னருக்கு நன்றியும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவிக்கையின்படி முதியவர் சண்முகத்தின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.  ராயபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி மற்றும் வருவாய் அலுவலர்,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மறைந்த முதியவர் சண்முகத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் அவரது சடலம் உறவினர் களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top