Close
ஜூலை 7, 2024 8:42 காலை

திராவிடஸ்தான் தனிநாடு கேட்டவர் ஈ.வெ.ரா… ஈரோட்டில்  எச். ராஜா

ஈரோடு

ஈரோட்டில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா

ஈரோட்டில் பாஜக சார்பில் தேர்தல் தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 19 -ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பொருத்த வரை வளர்ச்சி அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அர்ப்பணித்து சென்றுள்ளார். இந்த உண்மைகளை மறைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக மட்டுமே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவதாக குற்றம் சாட்டுகிறார்.
இன்று தமிழகத்தின் அடுத்த தலைமுறையையும் அழிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு கள்ளுக் கடைகளைத் திறந்து வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்கியது அப்போதைய கருணாநிதி அரசு. தற்போதைய மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு போதைப் பொருள்களின் உறைவிடமாக திகழ்ந்து வருகிறது.
திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கடந்த 2006 -ஆம் ஆண்டிலேயே கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த சமூக விரோதி ஆவார். ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்து 4 ஆண்டுகள் அதாவது 2013-ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்தார். இதே நபர் தான் 2019 -ஆம் ஆண்டில் மலேசியாவுக்கு கேட்டமைன் போதைப் பொருளை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதா?
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய “மங்கை” என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஜாபர் சாதிக் தான் என மத்திய என்டிசிபி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 தமிழகத்தில் ஜாபர் சாதிக் என்ற போதை கடத்தல்காரரும் ஜாபர் சேட் என்ற காவல் அதிகாரியும் பிணப்பெட்டியில் அடிக்கப்பட வேண்டிய கடைசி  ஆணிகள்.
ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து 2ஜி வழக்கை நீர்த்து போகச் செய்தவர் ஜாபர் சேட்.
அதேபோல் தமிழக டிஜிபி இடம் இருந்து பரிசுகளை பெற்றுக் கொண்டவர்தான் ஜாபர் சாதிக். இது போன்ற செயல்கள் அடுத்த தலைமுறையை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை என்பதையே உணர்த்துகிறது.
பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு
முகமதுஅலி ஜின்னா, ஈ .வெ. ராமசாமிக்கு கடிதம் எழுதிய போது, நீங்கள் பாகிஸ்தான் கேட்பது போல நாங்கள் திராவிடஸ்தான் நாடு கேட்போம் என்று பதில் கடிதம் எழுதியவர் தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்.
இது தொடர்பாக அவர், முகமது அலி ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பெயரை ஈவே ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருப்பதே இதற்கான ஆதாரமாகும். இவர்கள் தான் உண்மையான பிரிவினைவாதிகள். தேச விரோதிகள். இந்த வழியில் வந்தவர்கள் தான் இன்றைக்கு நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசுகிறார்கள்.
பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்றும் அதனை விரட்டப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். உண்மையான பாசிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளும், கழகங்களும் தான். தங்களது கருத்துகளைப் பிறர் மீது திணிப்பவர்களையே பாசிஸ்டுகள் என்பார்கள். அந்த வகையில் தமிழகத்தின் நம்பர் ஒன் பாசிஸ்ட் மு க ஸ்டாலின் தான்.
இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது 1967 -ஆம் ஆண்டு அல்ல. அப்பொழுது ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது போல இப்பொழுது வெற்றி பெற முடியாது.
தமிழக நலன் மீது அக்கறை  இல்லாத தமிழின துரோகிகள் இந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தான். கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு திட்டங்களை  தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. 2020 -ஆம் ஆண்டு தொடங்கி  கொரோனா முடியும் வரையிலும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை மக்கள் மறக்க மாட்டார்கள். மக்கள் நலத் திட்டங்களை மறைத்து கழை கூத்தாடிகள் போல கம்பி மீது நடனமாடி மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என்றார் எச். ராஜா.
பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த எச். ராஜா…
1970 -ஆம் ஆண்டில் கள்ளுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிகாரர்களாக மாற்றியவர் கருணாநிதி என்று பேட்டியின்  போது  எச்.ராஜா குறிப்பிட்டிருந்தார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை திறப்போம் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாரே? ஆனால் நீங்கள் கள்ளுக்கடைகளை திறந்து குடிகாரர் ஆக்கி விட்டதாக கருணாநிதியை குற்றச்சாட்டுகிறீர்களே! இது முரண்பாடான தகவல் இல்லையா?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எச். ராஜா, “கள் உணவின் ஒரு பகுதி, நான் அயல்நாட்டு மது வகைகளை தான்  அவ்வாறு குறிப்பிட்டேன்” என்று  மழுப்பலாக பதில் கூறினார்.
“மாநில அரசின் திட்டங்களைத் தான் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே? , என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா, திமுகவும் காங்கிரசும் புளுகுணிகள் என்று குற்றம் சாட்டினார்.  இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?, என்ற கேள்விக்கு பதில் அளித்த எச். ராஜா,நான் விரும்பி எந்த பதவியையும் கேட்பதில்லை; தலைமை கொடுத்தால் ஏற்பேன்  என்றார் ஹெச். ராஜா.
பேட்டியின் போது மாநில அரசு, மத்திய அரசு மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை, “நீங்கள் அறிவாலயத்தின் வக்கீல் போல செயல்படுகிறீர்கள்!” என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களை குற்றஞ்சாட்டி பேசியது நகைப்பை ஏற்படுத்தியது.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி.கார்வேந்தன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் என்.பி. பழனிசாமி, சிவசுப்பிரமணியம், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம், மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகி சரவணன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: மு.ப. நாராயணசுவாமி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top