Close
ஏப்ரல் 2, 2025 2:40 காலை

தோழர் ஐயா ஆர். நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள்

பிறந்தநாள் காணும் ஒருவரை “நூறாண்டு காலம் வாழ்க” என்று வாழ்த்துவது நம் வழக்கம். இலட்சத்தில் ஒருவர் மட்டுமே அந்த இலக்கைத் தொடுவர். ஆரோக்கியத்துடன் தொடுவது அதிலும் அபூர்வம்.
85 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல்லாயிரம் மைல்கள் பயணித்து, பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு, பல ஆண்டுகள் கொடிய சிறைவாசம் அனுபவித்து, பொது வாழ்க்கையில் புடம் போட்டத் தங்கமாக- நேர்மை, எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்து இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் அவர் எத்தகைய குணநலன்கள் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்?.

அவர்தான் மகத்தான தலைவராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா. இரா. நல்லகண்ணு.
தமிழர் நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக கருதப்படுவது தாமிரபரணி ஆற்றங்கரை. அந்த ஆற்று ஓரத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தையார் ராமசாமிக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டு அக்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட காலம் அது. நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவருடைய மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் சித்திரவதை செய்து இவருடைய தோழர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க முயன்றனர். துன்பங்கள் அனைதத்தையும் தாங்கிக் கொண்டு,காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வழக்கில் நல்லக் கண்ணுவுக்கு 1952 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 27 தான்.
சிறையிலிருந்த ஏழு ஆண்டுகளை புத்தகம் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்திக் கொண்டார். பின்னாளில் அவர் “தாமரை” இதழில் எழுதிய கட்டுரை தான் குற்றாலத்தில் “ரேஸ்கோர்ஸ்” அமைவதைத் தடுத்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட வந்த மாஃபியாகும்பல் இவரை கண்டுதான் அஞ்சி பின் வாங்கியது. இப் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கான போராட்டம், நாங்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு
நீதியைப் பெற்றுக் கொடுத்தார்.
தீண்டாமைக்கும் சாதீயத்துக்கும் எதிராக, ஏழை, எளிய- ஒடுக்கப்பட்ட மக்களின் தோழனாக-பொது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் கடந்த 85 ஆண்டுகளாக தன்னிலை மாறாமல், அப்பழுக்கற்ற நேர்மையாளராக எளிமையின் அடையாளமாக பயணித்தவர்
சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமியின் மகள் ரஞ்சிதம் அம்மையாரை 1958 ஆம் ஆண்டில் மணந்தார். 58 ஆண்டுகள் இவருக்கு உற்ற தோழராக இருந்த அந்த அம்மையார் 2016 டிசம்பரில் மறைந்தார். அவருடைய மறைவு ஐயாவுக்கு பேரிழப்பு ஆகும்.

தன் மகள் ஆண்டாளின் காது குத்து நிகழ்வின்போது கூட வெறுங்கையுடன் நின்று பிறகு நண்பர் சிவசுப்பிரமணியத்துடன் கடைக்குப் போய் கவரிங் கடுக்கன் வாங்கிக் கொண்டுபோன வாழ்க்கை இவருடையது.
இவருடைய 80-வது பிறந்த நாளின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி இவருக்கு வழங்கப்பட்டது. அதை அப்படியே கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்து விட்டார்.
தமிழக அரசு அவரைப் பாராட்டும் வகையில் அம்பேத்கர் விருதும் ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கியது. அதில் பாதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பாதியை தன் கட்சிக்கும் வழங்கிவிட்டார்.


அவருடைய 98 வது வயதில் , தமிழக அரசின் உயரிய விருதான “தகைசால் தமிழர்” விருதும் பத்து லட்சம் பணமும் வழங்கப்பட்டது. தான் கையில் கொண்டு வந்திருந்த ஐந்தாயிரம் பணத்தை 10 லட்சத்துடன் சேர்த்து வைத்து அதை அப்படியே முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் வழங்கி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டார். பொது வாழ்க்கையில் அவர் எப்படி பயணித்து வந்திதிருப்பார் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் சான்று. பணம் தன் மீது ஆட்சி செய்ய ஒருபோதும் இவர் அனுமதிக்கவில்லை.
பயணங்களின் போது புத்தகங்களை விரும்பிப் படிப்பார். ஒரு கட்டுரை பிடித்திருந்தால் எழுதியவர் முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அழைத்து பாராட்டுவது இவருடைய வழக்கம். இதுபோல பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பார்.
பொதுவுடமை கட்சியினரால் தோழர் ஆர்என்கே என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் 100 வது பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவும் 26.12.2024 அன்று கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெறுகிறது
வ. உ. சி., பாரதி போன்ற தியாகச் செம்மல்களை நிகழ்காலத்தில் கொண்டாடத் தவறி பின்னர் வருந்தி வருகிறோம். தமிழர்களின் வீடுகள் தோறும், தமிழர்கள் வாழும் வீதிகள் அனைத்திலும் கொண்டாடப்பட வேண்டிய பெருவிழா இது. இந்தப் பெருமகனாரை மனதார வாழ்த்துவோம். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரை மனதில் நிறுத்தி ,கட்டி அணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்துவோம்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top