நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படைக்கு ஒரு சட்டசபை தொகுதிக்கு 6 குழுக்கள், ஒரு குழுவிற்கு, 12 நபர்கள் என மொத்தம் 42 குழுக்களில் 192 அலுவலர்கள், போலீசார் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் மற்றும் புகார்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்து அதன் விவரங்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு எவ்விதமான அச்சுறுத்தல் உள்ளது போன்ற புகார்கள், வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பொருட்கள் வழங்குதல் தொடாபான புகார்கள் வரப்பெற்றால் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொது இடங்களில் கட்சி சம்மந்தமான கொடிகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், ஏதுமிருப்பின் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெறும் புகார்கள், இந்திய தேர்தல் கமிஷனால் நியமிக்கப்படும் தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் மூலம் புகார் மனுக்களின் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கெள்ளப்படும்.
நிலையான கண்காணிப்பு குழுக்கள் சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதிக்குபட்பட்ட சோதனை சாவடிகள் மற்றும் மற்றும் முக்கியமான இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனைகளில் ஈடுபட வேண்டும். வீடியோ கண்காணிப்பு குழுவினர் தாங்கள் பணியாற்றும் சட்டசபை தொகுதியில் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின் செலவினம் குறித்த ஆதாரங்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த ஆதாரங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுக்களால் சமர்ப்பிக்கப்படும் வீடியோ பதிவின் அடிப்படையில் கட்சிப் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் செய்யப்பட்டுள்ள செலவினங்களை கண்காணிக்க வேண்டும். கட்சி முக்கிய பிரமுகர்களின் பேச்சுகளை ஆரம்பம் முதல் இறுதிவரை கண்காணிக்க வேண்டும்.
கட்சி பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, போஸ்டர்களின் எண்ணிக்கை, சுவரொட்டிகள் மற்றும் இதர பொருட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் செலவினம் குறித்து கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு குழுவினர் தங்களுக்கான பணியின் தன்மையை அறிந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மாதவன் (பொது), சிவக்குமார் (தேர்தல்கள்) உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.