Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அருணாசலம் அறிவிப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப்பெற்ற திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாசலம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

இதில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பி.அருணாசலம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.

திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாசலம்

இவரது தந்தையின் பெயர் வி.என். பழனிசாமி. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பிறந்தார்.
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், தற்போது 2022 ஆம் ஆண்டு முதல் பெருந்துறை பேரூராட்சியில் 4ஆவது வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரையிலும் திருப்பூர், கோபி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பலரும் கட்சி சார்பில் விருப்பமனுத் தாக்கல் செய்து கட்சித் தலைமையிடமிருந்து சீட்டு கேட்டு காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதுமுக வேட்பாளரான அருணாசலத்திற்கு சீட்டு வழங்கி கட்சி தலைமை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தற்போதைய நிலையில் திருப்பூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பெருந்துறை, பவானி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பூர் தெற்கு அந்தியூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ளது. மற்ற 4 தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் போட்டியிடும் நிலையில் திருப்பூர் தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top