Close
மே 11, 2024 12:07 மணி

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்..!

அண்ணாமலையார் கோவில் (கோப்பு படம்)

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பங்குனி மாத பௌர்ணமி அன்று பங்குனி உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:54 தொடங்கி திங்கட்கிழமை 25 ஆம் தேதி பிற்பகல்12:55 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,  அதன்படி,
சென்னை கடற்கரை – திருவண்ணாமலை
சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடைகிறது.

மயிலாடுதுறை விழுப்புரம்- திருவண்ணாமலை
மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி காலை 9:15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

அதே போன்று மறு மார்க்கத்தில் பகல் 12: 40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் – திருவண்ணாமலை
தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு திருவண்ணாமலையை 11.00 மணிக்கு வந்து அடையும், என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top