Close
நவம்பர் 21, 2024 11:48 மணி

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சேவை மனப்பான்மை கொண்டவர். இந்த தேர்தலில் தோழமைக் கட்சிகளான தேமுதிக, எஸ்டிபிஐ, பார்வேர்ட் விழாக் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளோடு இணைந்து அதிமுக சிறப்பான முறையில் தேர்தல் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.
அதிமுக எப்பொழுதும் மக்கள் பணியாற்றும் இயக்கமாக இருந்து தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரையிலும் அதிமுக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கட்டாயம் வெற்றி பெறும் .

நாளை முதல் அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் செய்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்படும். ஓபிஎஸ் மட்டுமல்ல யாராலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க முடியாது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வீரக்குமார், மாநகர மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top