இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
யோகாசனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 18 பள்ளிகளை சேர்ந்த 382 மாணவ மாணவிகள் பங்கேற்ற மாபெரும் யோகாசனம் மற்றும் விழிப்புணர்வு வரவேற்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தேர்தல் அன்று தவறாமல் தங்களது வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வுகளில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட கல்வி அதிகாரிகள்,தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், ஆசிரியர்கள், யோகாசன ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.