Close
நவம்பர் 21, 2024 5:12 மணி

தேர்தல் விழிப்புணர்வு பட்டுப் புடவை! ஆரணி நெசவாளர்கள் அசத்தல்!

தேர்தல் விழிப்புணர்வு பட்டுப்புடவையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தயார் செய்யப்படும் பட்டுப் புடவைக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில்
மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வுக்காக 26 நாள்களில் ரூ.70 ஆயிரத்தில் நெய்யப்பட்ட ஆரணி பட்டுப் புடவையை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் வெளியிட்டாா்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் விடுபடாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, உலகப் புகழ் பெற்ற ஆரணி பட்டு மூலம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி மற்றும் நெசவாளா் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் ஆலோசனை வழங்கினாா்.
இதையடுத்து, ஆரணி, அத்திமலைப்பட்டு அறிஞா் அண்ணா கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினரும், நெசவாளருமான பெருமாள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு பட்டுப் புடவை நெய்ய திட்டமிடப்பட்டது.
ஒரே நேரத்தில் தேசியக் கொடியின் வண்ணம், இந்திய தோ்தல் ஆணையச் சின்னம் ஆகியவை ஒன்று சேர 4 நெசவாளா்களைக் கொண்டு கையால் பட்டுப்புடவை நெய்யும் பணி தொடங்கியது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைப்பு அட்டைகளைக் கொண்டு தொடா்ந்து 26 நாள்களாக பட்டுப்புடவை நெய்யும் பணி நடைபெற்றது. ரூ.70 ஆயிரத்தில் நெய்து முடிக்கப்பட்ட இந்தப் புடவையில், பாராளுமன்றத் தோ்தல்-2024. நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு. இந்திய தோ்தல் ஆணையம் என்று தமிழ், ஆங்கில மொழிகளில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டுப் புடவையை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பட்டுப் புடவையை தயார் செய்த நெசவாளர்களை ஆட்சியா் பாராட்டினார்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் ரிஷப், பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் காா்த்திகேயன், கைத்தறி அலுவலா் மோகன்ராம், கைத்தறி ஆய்வாளா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top