Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் அருகிலுள்ள நல்லமங்காபாளையத்தில் அறிவிக்கப்பட்டபடி மணி மண்டபம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் வி.எஸ்.சண்முகம் வரவேற்றார்.சமூக நீதிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி,சமூக நீதி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எம் கே ஆறுமுகம், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் சம்பத்குமார்,

தலித் விடுதலைக் கட்சி இதை பொதுச் செயலாளர் சகுந்தலா தங்கராஜ், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் ஈரோடு வீரக்குமார், திராவிடர் சிறுத்தைகள் கட்சி வருவாய் சாமிநாதன், அருந்ததியர் விடுதலை முன்னணி என்.டி.ஆர் மாதிகா, தேசிய தாழ்த்தப் பட்டோர் நல உரிமை இயக்கம் வி.பி.எம்.பன்னீர்செல்வம், மதுரை வீரன் மக்கள் விடுதலை இயக்கம் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து வடிவேல் ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்ட தியாகியாக இருந்த தீரன் சின்ன மலையின் போர்படைத் தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான். தீரன் சின்னமலையின் பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்து அவருக்கு அறச்சலூர் அருகே ஓடா நிலையில் மணி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலைக்கு உறுதுணையாக இருந்து கடைசி வரை அவரை காட்டிக் கொடுக்காமல் உயிர் துறந்த சுதந்திரப் போராட்ட தியாகி பொல்லான் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தற்போது அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது.

அதேபோல மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் அருகிலுள்ள நல்லமங்காபாளையத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதனை ஏற்று கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மணிமண்டபம் கட்ட ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கவில்லை.

பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி தாமதமானால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

# செய்தி-ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top