சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய, மாநில அரசுகள் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று தஞ்சாவூர் கீழராஜவீதி ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி பேசுகையில், குருவைப் பயிர்கள் காவிரி தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகிவிட்ட நிலைமையும், அதனால் விவசாயிகள் துன்பங்களையும், நடப்பு சம்பா பருவத்தில் சட்டப்படியான காவிரி நீர் பெற்றுத் தர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.எதிர் கால கடமைகள் குறித்து தேசிய குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
கூட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட பொருளாளர் நா.சௌந்தர்ராஜன், மாவட்ட துணை தலைவர் அ.கலியபெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் கள் துரை.பன்னீர்செல்வம், சி.ஜெயராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு குருவை இழப்பீட்டுத் தொகை யாக ஹெக்டேருக்கு ரூ13, 500 அறிவித்துள்ளது .ஆனால் பயிர்கள் முழுவதுமாக கருகி குருவை சாகுபடி பாழான நிலையில், விவசாயிகளின் இழப்பீட்டை சரி செய்ய ஏக்கருக்கு ரூபாய் 35,000 ம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு நிறுவனத்தில் விவசாயிகள் ரூபாய் 3500 கோடி இன்சூரன்ஸ் தொகை கட்டியுள்ளனர்.
ஆனால் ஒன்றிய அரசு காப்பீட்டுத் தொகை அறிவித்திருப்பது வெறும் 560 கோடி ரூபாய் தான். எனவே பயிர் காப்பீட்டு தொகையை மறுபரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகை யை முழுமையாக வழங்க வேண்டும்.
சம்பா சாகுபடிக்கு காலதாமதம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடகா அரசிடமிருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி தண்ணீரை பெற்று தர ஒன்றிய,மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில் விலை மிகவும் குறைவாக உள்ளது. தேங்காய் விவசாயிகளின் இழப்பீட்டை சரி செய்ய உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 160 ரூபாயும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு அங்காடிகள் மற்றும் சத்துணவு மையங்களில் பாமாயில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது, தேங்காய் உற்பத்தியையும், வியாபாரிகளையும் ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன