Close
மே 12, 2024 12:17 காலை

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்.  உரித்த தேங்காய்ககளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தொடக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் முடித்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக டெல்லி தலைநகரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கைவிட்டு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு ஒன்றிய மோடி அரசு கொண்டுவர வேண்டும்.

எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்குதல், மின்சார சட்ட திருத்தம் திரும்ப பெறுதல், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நாடு முழுவதும் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், உபி லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற விவசாயிகள் மீதான படுகொலைகளுக்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கும் வரைவறிக்கையை திரும்ப பெற வேண்டும், பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 37,000  கோடியை உடனடியாக வழங்க வேண்டும். ஆந்திர அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தீர்ப்பாயம் அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் வேண்டும்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு உரித்த தேங்காய்ககளை கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை கைவிட்டு அனைத்து உபயோகத்திற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 500 ம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 500 -ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சி.ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் நா.செளந்தரராஜன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் து.இரவி, ஒன்றிய தலைவர் பெ.கருணாநிதி, ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் அ.அய்யாக்கண்ணு, ஒன்றிய தலைவர் த.கிருஷ்ணன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சி.எஸ்.அஜய்குமார், மாவட்ட குழு உறுப்பினர் வெ.அன்பழகன், தஞ்சை ஒன்றிய செயலாளர் ஜி.இராமலிங்கம், உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top