ஈரோடு கோட்டை பெருமாள் எனப்படும் கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர் திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் விமரிசையாக நடைபெறும்.
நிகழ் ஆண்டுக்கான ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் (கோட்டை பெருமாள் கோயில்) தேர்த் திருவிழா கடந்த 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக யாகசாலை பூஜையும் திருமஞ்சனம் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார், உறுப்பினர் கீதா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வம் என்கிற பழனியப்பன், உறுப்பினர் பழனிவேல், செயல் அலுவலர் கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்த்திருவிழாவை ஒட்டி தினந்தோறும் கோட்டை அரங்கநாத பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அலங்கரிக் கப்பட்ட அன்னபக்ஷி, சிம்ம, அனுமந்த வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை (கருட வாகனம்) நிகழ்ச்சி நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனத்திலும் இரவு 7 மணி அளவில் சுவாமியின் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
25 -ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சுவாமியின் திருக்கல் யாண உற்சவ நிகழ்ச்சியும் 26 -ஆம் தேதி காலை 7:15 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
27 -ஆம் தேதி மாலை 7 மணி அளவில் குதிரை வாகனத்திலும் (பரிவேட்டை), 28-ஆம் தேதி சேஷ வாகனத்தில் திருக்கோயில் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவ விழா நடைபெறும்.இறுதி நிகழ்ச்சியாக 29-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் தீர்த்தவாரி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.இரவு 7 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் அன்னக்கொடி மற்றும் தக்கார் மற்றும் உதவி ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் கயல்விழி ஆகியோர் செய்து வருகின்றனர்.
# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #