Close
டிசம்பர் 18, 2024 2:06 காலை

சேலம் 1,008 சிவாலயத்திற்காக நாமக்கல்லில் தயாரிக்கப்படும் 1,400 கிலோ எடை ஆலயமணி

சேலம், 1,008 சிவாலயத்தில் பொருத்துவதற்காக, நாமக்கல்லில் 1,400 கிலோ எடையில், மெகா ஆலயமணி தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன் (64). இவரது மகன் காளிதாஸ் (39), இவர்கள் ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு, பல்வேறு வடிவங்களில், ஆலய மணிகள், வேல்கள் மற்றும் கோயில்களுக்கான பொருட்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அயோத்தி ராமர் கோயிலுக்காக இங்கு, சுமார் 24 கோயில் மணிகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் அரியானூரில் உள்ள, 1,008 சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக, 1,400 கிலோ எடையில் ஆலயமணி தயாரிக்க இவர்களுக்கு ஆர்டர் கிடைத்தது. அதையடுத்து, கடந்த 1 மாதமாக தினமும், 10 பேர் வீதம் பணியாற்றி, 1,400 கிலோ எடையில் ஆலயமணி தயார் செய்யப்பட்டது. நேற்று மாலை கிரேன் மூலம் அந்த மணி லாரியில் ஏற்றப்பட்டு, சேலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, ஸ்தபதி ராஜேந்திரன், அவரது மகன் காளிதாஸ் ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் நாமக்கல்லில் பரம்பரையாக ஆலய மணிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, 120 கிலோ எடையில் 6 மணிகள், 70 கிலோ எடையில் 6 மணிகள், 20 கிலோ எடையில் ஒன்று, மற்றும் பூஜை மணிகள் 35 தயாரித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி லாரி மூலம் அயோத்தி அனுப்பி வைத்தோம்.

அதையடுத்து, சேலம் அரியானூர் 1,008 சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, 1,400 கிலோ எடையில் ஆலயமணி தயாரிப்பதற்காக எங்களுக்கு ஆர்டர் கிடைத்து. இதற்காக எங்கள் தொழிற்சாலையில் 10 பணியாளர்கள் தொடர்ந்து 30 நாட்கள் பணியாற்றி, இந்த பிரமாண்டமான மணியை தயார் செய்துள்ளோம். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணியின் மதிப்பு சுமார் ரூ. 45 லட்சம் ஆகும்.
வழக்கமாக ஆலய மணிகளுக்கு, தங்க மூலாம் பூசுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதன் முறையாக, ஆலய மணிக்கு நாங்கள் பாலீஷ் போட்டு மெருகேற்றி உள்ளோம். இந்த பாலீஷ் சுமார் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top