Close
செப்டம்பர் 19, 2024 10:54 மணி

அண்ணாமலையார் கோயிலில் வரும் 11ம் தேதி சுந்தரமூர்த்தி நாயனார் விழா

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தினந்தோறும் பல விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு குருபூஜை விழா அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகிற 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

தொடர்ந்து நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இரண்டாம் பிரகாரத்தில் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களை கொண்டு மாலைகள் தொடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுந்தரமூர்த்தி நாயனார்க்கு நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன் பின்னர்  மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து திருவீதி எழுந்தருளி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் செல்வார். அங்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெறும் அதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீ சுந்தரரிடம் ஸ்ரீ பிச்சாண்டவர் தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் ஆனந்த தாண்டவம் ஆடி அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயில் அருகில் எழுந்தருளி, தடுத்தாட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
தடுத்தாட்கொள்ளும் நிகழ்ச்சி
இல்லற வாழ்க்கைக்கு செல்ல முயன்ற சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டு திருக்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும், இனி இல்லற வாழ்வு இல்லாமல் என்னை நினைத்து பாடல்கள் எழுத வேண்டும் என சிவபெருமான் கூறியதாக ஐதீகம். இதையடுத்து ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசல் படியில் அண்ணாமலையார் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு காட்சி கொடுத்து தடுத்தாட்கொள்வார். அதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் ஆனந்த தாண்டவம் ஆடி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலையார் திருக்கோவில் ஓதுவார் தேவார இசைமணி கணேசன் மற்றும் திருக்கோயில் மிருதங்க வித்வான் சிவக்குமார் அவர்களின் தேவார இசை நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலாவில் சிறப்பு வானவேடிக்கைகளும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நாதஸ்வர வித்வான் அப்பு பிள்ளை குழுவினரின் சிறப்பு நாதஸ்வர தவிலிசை, மற்றும் திருப்பாம்புரம் சகோதரர்கள் மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன், மற்றும் குஞ்சிதபாதம் குழுவினரின் நாதஸ்வர தவிலிசையும் நடைபெறும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top