Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு குளம் போல் தேங்கிய பாமாயில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பரபரப்பு

சென்னை

சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாயில் செவ்வாய்க்கிழமை திடீரென கசிவு ஏற்பட்டு வெளியேறி குளம்போல் தேங்கிய பாமாயில் கச்சா எண்ணெய்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு பாமாயில் தயாரிப்பதற்கான கச்சா எண்ணெய்  வெளியேறி குளம்போல் தேங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் சிலர் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகூரார் தோட்டம் அருகே குளம் போல் எண்ணெய் படலங்கள் தேங்கி இருப்பதும்.

இதனை அகற்றும் பணியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டிருப்ப தையும் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து மீனவர் நல அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மீனவர் நல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக அங்கு குவிந்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் சென்னை துறைமுகத்திலிருந்து திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள (கேடிவி) தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கு பூமிக்குள் பதிக்கப்பட்ட குழாய் மூலம் பாமாயில் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதும்.

பிறகு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சமையல் எண்ணெய் தயாரிப்பதும்,  இக்குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாமாயில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு காசிமேடு துறைமுகத்தில் குளம் போல் தேங்கியதும், எண்ணெய் கசிவு குறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவன ஊழியர்கள் உடனடியாக துறைமுகத்திலிருந்து ஆலைக்கு கச்சா எண்ணெயை அனுப்பும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

சுமார் 30 டன் அளவுக்கும் மேலாக எண்ணெய் கசிவு ஏற்பட்டு குளம் போல் தேங்கியது மட்டுமல்லாது மழை நீர் கால்வாய் மூலம் மீன் பிடித்து துறைமுகத்தின் உள்ளேயும் பாமாயில் சென்றிருப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடும். ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளால் காசிமேடு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் சீர்கேடு இச்சம்பவத்தால் மேலும் மோசமான நிலை எற்படும்.

இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்பு உள்ளாகும். எனவே உரிய விசாரணை நடத்தி பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயின் உறுதித் தன்மை குறித்து பரிசோதனை நடத்த வேண்டும் என இந்திய மீனவர் சங்கத் தலைவர் எம்.டி. தயாளான் காசிமேடு மீன்பிடித்துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த  ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். இதனையடுத்து எண்ணெய் படலங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை துறைமுகத்திலிருந்து சமையல் எண்ணெய், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்ல பூமிக்கு அடியில் ஏராளமான குழாய்கள் பதிக்கப்பட் டுள்ளன. இதில் ஒரு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியில் இருப்பது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top