புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் (25.04.2023) மேற்கொண்டார்கள்.
பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன்படி கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களில் பணி முன்னேற்றம் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா எண்ணிக்கைகள், பட்டா மாற்றம், இணையவழி மூலம் வழங்கப்படும் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் குறித்தும், முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் குறித்தும்,
ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வேலைநாட்கள், செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நமக்கு நாமே திட்டம், அம்ரூட் 2.0 திட்டம், புதை சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், சிறார் கண்ணொளித் திட்டம் குறித்தும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப் பெண் திட்டம், குழந்தை திருமணங்கள் தடுப்பு.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , பள்ளிக்கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளின் கட்டமைப்புகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
மேலும் முதல்வரின் முகவரித் திட்டம், நான் முதல்வன் திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் மூலமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் மூலம் தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு)பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.