Close
மே 10, 2024 11:42 காலை

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இன்று காலையில் பெய்த திடீர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்ட உழவர் சந்தை

தமிழகத்தின் 24 மாவட்டங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து  வருகிறது. தமிழ்நாட்டின்  பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது

கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது .

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை வெயிலின் கொடுமையை போக்க அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கடந்த வாரம்  பெய்த கோடை மழை குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி  வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் புதன்கிழமை காலையில் பெய்த திடீர் மழை ( பேருந்து நிலையம்)

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மழை வாய்ப்பு குறித்து அவ்வப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இன்று 24 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  மழை பெய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் இருந்தாலும் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் வெயில் அடித்து வெப்பமான சூழல் உருவாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top