Close
நவம்பர் 25, 2024 12:03 மணி

சனாதன சக்திகளை  எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை

தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலின் முதல்பிரதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பெற்றுக்கொண்டார்.

தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள சனாதன சக்திகளை எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம் என்றார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

கவிஞர் எஸ்.இளங்கோ அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவை ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதையொட்டி அவர் எழுதிய ‘தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூலின் முதல்பிரதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது:தமிழ்நாடு அரசு நூலகங்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் சாட்சியாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் எழுந்துள்ளது. அரசு சார்பில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை நாம் அனைவரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுவோம்.

கவிஞர் எஸ்.இளங்கோ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படைப்புகளை எழுதியும், உலகத் திரைப்படங்களை திரையிட்டு வருவதும் வியக்கத்தக்க சாதனையாகும். இங்கே வெளியிடப்பட்டுள்ள ‘தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற அறிவியல் கட்டுரை தமிழுக்கு மிக முக்கியமான நூலாகும். நிறைய உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இயற்கையை, அறிவியல் தொழில்நுட்ப பார்வையோடும் எதிர்காலத்தோடும் சேர்த்து பார்க்கக்கூடிய கட்டுரைகளை இளங்கோ  எழுதியுள்ளார். சுற்றுப்புற சூழல் குறித்து இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கிறேன். பல மணி நேரம் சூழல் குறித்துப் பேசி வெளிப்படுத்தக்கூடிய அக்கறையை இவர் இரண்டு பக்க கட்டுரைகளில் சாதித்துள்ளார்.

இன்றைக்கு சனாதன சக்திகள் நாட்டை பிற்போக்கு பாதையில் இழுத்துச் செல்கிற சூழலில், அவற்றை எதிர்கொள்ள இதுபோன்ற அறிவியல் வெளியிடுகள் மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. ‘தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து’ என்ற அற்புதமான படைப்பையும் இவர் தந்துள்ளார். இவர் எழுதிய நூல்களை அரசு நூலகங்களில் கொண்டுசெல்வதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

விழாவில் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர் த.சந்திரசேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் ஜீவி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நூலாசிரியர் எஸ்.இளங்கோ வரவேற்க, கி.ஜெயபாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கவிஞர் ஸ்டாலின் சரவணன் தொகுத்து வழங்கினார். தமுஎகச நிர்வாகிகள் ஆர்.நீலா, ராசி.பன்னீர்செல்வன், சு.மதியழகன், சு.பீர்முகமது, மு.கீதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top