Close
நவம்பர் 21, 2024 10:23 காலை

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் எம்பி -க்கள் சு. திருநாவுக்கரசர், எம்எம். அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டம்

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்மென வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒன்றிய, மாநில அரசுகள் வங்கிகளின் உதவியுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்தும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி 3 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்களை, பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் நடத்திட அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி  நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதம மந்திரி ஸ்வாநிதி தெருவோர வியாபாரிகளுக்கான உதவித் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,

மாவட்ட தொழில் மையம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்கும் திட்டம்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், ஒன்றிய, மாநில அரசின் மூலம் மேற்கண்ட திட்டங்களுக்காக வழங்கப்படும் மானிய நிதி உதவிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இத்திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்காக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கைகள் குறித்தும், அவற்றிற்கு வழங்கப்பட்ட கடனுதவிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒன்றிய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைத்து வங்கிகளும் உடனடியாக கடனுதவிகளை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வங்கியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஐ.ஓ.பி. மண்டல மேலாளர் சுந்தரகிருஷ்ணன், ஆர்.பி.ஐ. துணை மேலாளர் ரமேஷ், நபார்டு வங்கி மேலாளர்தீபக்குமார், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் எஸ்.திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top