பசுமை தமிழக நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப் 24 – ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தொடக்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் வனம் மற்றும் வனங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டம் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வனப்பரப்பை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த மாபெரும் மரம் நடும் திட்டத்தின் மூலம் 10 வருட காலத்திற்குள் வனம் மற்றும் வனங்களின் பரப்பை அதிகரிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் 39 சதவீதம் பசுமை பரப்பாக உள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் மக்களின் பங்களிப்போடு உள்நாட்டு மற்றும் பல்வேறு இனவகை, மரவகை கன்றுகள் நடும் மாபெரும் நடும் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்தாண்டு சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தினை தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மேலும், ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் வருவாய்த் துறை, வனத்துறை, தோட்டக்கலை த்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில், வேம்பு, மலைவேம்பு, பூவரசு, புங்கன், நாவல், இலுப்பை, வாகை, நீர் மருது மற்றும் தேக்கு உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளும் மற்றும் வனத்துறையின் சார்பில், அரச்சலூர் நவரசம் கலைக்கல்லூரி மற்றும் வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் உட்பட அனைவரும் சிப்காட் வளாகத்தில் சுமார் 2,500 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது..
மேலும், ஈரோடு மாவட்டத்தில் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 20 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்படவுள்ளது என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் நா.வெங்கடேஷ் பிரபு உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா வன விரிவாக்க அலுவலர் மணிவண்ணன், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், சிப்காட் உதவி செயற்பொறியாளர் சுஜா, இயற்கை மற்றும் பசுமை சமூகம், பசுமை கோமர் கார்த்திக், அரச்சலூர் நவரசம் கலைக் கல்லூரி மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.