Close
நவம்பர் 21, 2024 9:36 மணி

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை:அமைச்சர் சு. முத்துசாமி

ஈரோடு

ஈரோடு, வில்லரசம்பட்டியில் நடைபெற்ற புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூபே அட்டைகளை வழங்கினார்

மனுக்கள் நிலுவையில் உள்ள மகளிருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு, வில்லரசம்பட்டியில் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூபே அட்டைகளை வழங்கி பேசியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்புக்கு வந்த முதல் நாளிலேயே மகளிர் உரிமைதொகை திட்டத்தை செயல் படுத்த விரும்பினார். ஆனால் அந்த காலகட்டத்தில் தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமாக இருந்ததால் அந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியாமல் போனது.

இருப்பினும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை முதல்வர் உடனடியாக செயல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார். இதன் காரணமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்று எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்தனர்.

ஈரோடு

நிதிநிலை மோசமாக இருந்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதில் எங்களுக்கே நம்பிக்கை போய்விட்டது.ஆனால் சிறிது கால தாமதத்திற்கு பிறகு செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை வெற்றி கரமாக தமிழக முதல்வர் செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

திட்டம் தொடங்கிய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான அட்டை வழங்கப்பட்டது. விண்ணப்பித்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் விடுபட்டு போனதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் வகையில் விண்ணப்பித்து நிலுவையில் இருந்த மனுக்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 7.30 லட்சம் பேருக்கு இன்றைய தினம் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 1.14 கோடி மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மற்ற மனுக்களின் பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இன்றுவரை 15 ஆயிரத்து 455 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப் பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 928 பேருக்கு உரிமைத் தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த மகளிரில் 40 ஆயிரத்து 470 பேரின் மனுக்கள் பரிசீலனை செய்து அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்க வாய்ப்புள்ளது.

ஈரோடு
விழாவில் பங்கேற்ற மகளிர்

தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பல குடும்பங்களில் வறுமை காரணமாக பிளஸ் டூ படிக்க செல்லும் மாணவிகளை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்களது குடும்பம் பாதிக்கப் படுவதை தடுப்பதற்காக அரசுப்பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் செயல்படுத்தி வருகிறது.இதேபோல்தான் மகளிருக்கு டவுன் பஸ்களில் விலையில்லா இலவச பேருந்து பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசின் இந்த திட்டங்களால் தமிழக மகளிருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு விரைவில் வருகை தர உள்ளார். அதனைத் தொடர்ந்து 4 அல்லது 5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

# செய்தி: மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top