முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்று முத்தமிழ்த்தேரின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை விளக்கிடும் வகையில் முத்தமிழ்தேர் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப் பட்டது. இந்தவாகனம் “எழுத்தே எனது மூச்சு,எழுதுவதே எனது தினப்பழக்கம்” என்று முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் பயன்படுத்திய பேனாவடிவில் அமைக்கப் பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் முத்தமிழ்தேரை மலர் தூவி வரவேற்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் முத்தமிழ் தேரிலிருந்த கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பார்வையிட்டார்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மன்னர் சரபோஜி கல்லூரி எதிரில் முத்தமிழ் தேரினை மேயர் சண். இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதிமற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமான கல்லூரி பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப் பட்டுள்ளது. வாகனத்தின் உள்ளே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுர இல்ல உள் அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளே அஞ்சுகம் அம்மாள் உருவச்சிலையும் அதன் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மேலும்,முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் அவரதுபடைப்புகளும்,அவரதுபன்முகத் தோற்றத்தினை விளக்கும் ஒலி, ஒளிஅமைப்பும் உருவாக்கப்பட்டு காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. கலைஞர் எழுத்துகளால் உயிர்ப் பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றைகைப் பேசிவாயிலாக இன்றைய இளம் தலை முறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கியு ஆர் கோட் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சுப.தமிழழகன் (கும்பகோணம்), மாநகராட்சிஆணையாளர் மகேஷ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் த.அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், எஸ்.செல்வகுமார், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் 2000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டனர்.