திருச்சி: ஏர்போர்ட் புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (2.1.2024) திருச்சி வருகிறார்.
இதனால் ஏர்போர்ட், பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ₹1,100 கோடியில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழா (ஜன.2) இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சர்வதேச விமான நிலையத்தின்புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அந்த விழாவிலேயே பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும் உள்ளார். தொடர்ந்து திருச்சி என்ஐடியில் ₹41 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப் பட்டிருக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட ‘அமெதிஸ்ட்’ என்ற மாணவர்கள் தங்கும் விடுதியை திறந்து வைக்கிறார்.
செங்கோட்டை – தென்காசி சந்திப்பு- திருநெல்வேலி- திருச்செந்துார், விருதுநகர்- தென்காசி சந்திப்பு இடையிலான மின் மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும், 41.1 கிமீ கொண்ட சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர்-மேட்டூர் அணை, 160 கிமீ தொலைவு கொண்ட மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதையையும் அவர் நாட்டுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர புதிய விமான சேவையையும் தொடக்கி வைக்கிறார்.
விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் வாயிலாக லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் நேற்று இரவு முதல் இன்று (ஜன2) இரவு வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் கே.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.