Close
ஜூலை 2, 2024 2:31 மணி

சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் பலி

சிவகங்கை

சிறாவயல் மஞ்சுவிரட்டு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பெரியகருப்பன், எம்பி. கார்த்திசிதம்பரம், ஆட்சியர் ஆஷாஅஜித்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடு முட்டி உயிரிழந்தனர்.இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், கொடியசைத்து
தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதில், குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சு விரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட் டத்தில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும், உலக புகழ் பெற்ற சிறாவயல்  மஞ்சுவிரட்டு, சிறாவயல் கிராமத்தில் இன்றையதினம்  சிறப்பாக நடைபெறுகிறது.

இம்மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், இப்பணியில் 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 1000 காவலர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

சிவகங்கை
சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய இளைஞர்

இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் இருந்து போட்டியை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

 முன்னதாக, சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மாடுபிடி வீரர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த் , சிறாவயல் ஜல்லிக்கட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாடு முட்டி வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் பலி:

இது தொடர்பாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட இரங்கல் செய்தி:

சென்னை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில்  17.01.2024 அன்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் மகன் முத்துமணி (32)  மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன்  பாஸ்கரன் (12) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3  லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top