ஒன்றிய அரசின் விவசாயிகள்- தொழிலாளர்கள் கொள்கைகளை கண்டித்து பிப்ரவரி 16 ஆம் தேதி நடை பெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் தலைமை அஞ்சலகங்கள் முன்பு மறியல் போராட்டம்! தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றவில்லை. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலையும், எரிபொருட்கள் விலையும் கட்டுப்படுத்தப் படவில்லை.
தொழில் துறை முடங்கியுள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை ,மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டு கார்ப்பரேட் பெரும் நிறுவனங்க ளுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, உபி லக்கிம் பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் புதிய மின்சார சட்ட திருத்தம் திரும்ப பெறுவது உள்ளிட்ட ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து பிப்ரவரி 16 -ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு ஐக்கிய விவசாய முன்னனி, மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வெற்றி பெறுவது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஏ ஐ சி சி டி யூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்து சங்க நிர்வாகிகள் ஏஐடியூசி தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன், சிஐடியூ கோவிந்தராஜ், கே.அன்பு, தொமுச காளிமுத்து, ஐஎன்டியூசி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 16 பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்றும், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் அஞ்சலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது .