Close
நவம்பர் 21, 2024 10:01 மணி

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய தமிழர் போற்றிய வள்ளலார் இருவர் நூல் வெளியீட்டு விழா

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில்  ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ( 11.02.2024)   நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக தமிழீழத் தந்தை செல்வநாயகம் 125 -ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி  பாவலர் காசி.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. உலகத்தமிழர் பேரமைப்பின் நிர்வாகி ந.மு தமிழ்மணி வரவேற்றார்.  நிர்வாகிகள் துரை.குபேந்திரன், டி.சி.எஸ் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குனருமான வி.சி.குகநாதன், தந்தை செல்வாவின் பிறந்த நாள் விழா உரை நிகழ்த்தினார் .

இதை தொடர்ந்து உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய தமிழர் போற்றிய வள்ளலார் இருவர் நூல் வெளியீட்டு விழா மாலை நடைபெற்றது.

குறள் நெறிச்செல்வர் புலவர். சுப.இராமச்சந்திரன் நூலை வெளியிட உலகத்தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் பொறியாளர் சு.பழனிராசன்,கோ.பாபு ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, வள்ளலார் 201 -ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் படப்பை இரா. பாலகிருட்டிணன் தலைமை வகித்தார்.

உலகத்தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் அயனாபுரம் சி.முருகேசன், சா.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை அரசு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் காய்கொண்டு வந்திடும் கனிகொண்டு வந்திடுமோ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வள்ளலார் 201 -ஆவது ஆண்டு விழாவின் சிறப்புரையாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து அருட்பா பாடல்கள் நடைபெற்றது. முடிவில் பேராசிரியர் வி.பாரி நன்றி கூறினார். நிகழ்வினை பொறியாளர் ஜோ.கென்னடி ஒருங்கிணைத்து நடத்தினார்.

முன்னதாக உலகத்தமிழர் பேரமைப்பு ஆட்சிமன்றக்குழு கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தொல்லியல் அறிஞர், உலகப் பெருந்தமிழர் புலவர் செ. இராசு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ஆகியோரின் மறைவிற்கு ஆட்சிக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வள்ளலார் அவர்களின் பெயரில் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை இந்த ஆட்சிக்குழு வரவேற்றுப் பாராட்டுகிறது.

வள்ளலார் அவர்களின் தத்துவச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டியது இன்றியமையாததாகும். அந்தப் பணியி னைத் தொடக்கி வைத்திருக்கும் முதல்வருக்கு இக்குழு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையின் முன் புறம் அமைந்திருக்கும் பெருவெளியில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளன்று இலட்சக்கணக்கான மக்கள் கூடி அவரை வழிபாடு செய்கிறார்கள். அந்த இடத்தில் பன்னாட்டு ஆய்வு மன்றக் கட்டடத்தை எழுப்பாமல் அதற்கு அருகேயுள்ள வேறு இடத்தில் இந்த மையத்தை அமைக்க முன்வருமாறு முதல்வரை இக்குழு வேண்டிக்கொள்கிறது.

 1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஏராளமான தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகுகள், வலைகள் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கும் கடமையிலிருந்து முற்றிலுமாக தவறிவிட்ட இந்திய அரசை இக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட் டிருக்கிறது. ஆனாலும், அத்துமீறி நமது மீனவர்களைத் தாக்கிவரும் சிங்களக் கடற்படை மீது நடவடிக்கை எடுத்து நமது மீனவர்களைக் காப்பதற்குக் கடலோரக் காவல்படை இதுவரை ஒருமுறைகூட எவ்விதமான எதிர் நடவடிக்கையும் மேற்கொள்ளாததை ஆட்சிக்குழு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை அமைக்கப்பட்டு ஊர் தோறும் செயல்பட்டு வருகிறது. அதைப்போல மீனவர்கள் காவல்படை ஒன்றை அமைத்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்குவதற்குத் தமிழக அரசு முன்வரவேண்டும் என ஆட்சிக்குழு வேண்டிக்கொள்கிறது.

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்களில் 19பேரை முதலிலும், தற்போது 7தமிழர்களையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. ஏறத்தாழ 31 ஆண்டு காலம் சிறையில் சொல்லொண்ணா துன்பங்க ளுக்கு ஆளாகி வெளிவந்திருப்பவர்களில் நால்வர் ஈழத் தமிழர்கள் என்பதால், அவர்களை மீண்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் வைத்திருப்பதை இக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு முன்பாக விடுதலையான 19 தமிழர்களில் 9 பேர் ஈழத் தமிழர்கள் என்பதையும், அவர்களும் இவ்விதமே சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை இந்திய அரசின் கவனத்திற்கு இக்குழு கொண்டு வருகிறது.

எனவே இந்த நால்வரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டுமென இக்குழு வேண்டிக்கொள்கிறது.

கீழடியில் அகழாய்வு செய்து அதன் முடிவுகளைத் தொல்லியல் அறிஞர் குழு சார்பாக திரு. அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் ஏழு மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். அதற்கு முன்பாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளும் இந்திய ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அறிக்கைகளையும் இதுவரை வெளியிடாமல் இந்திய அரசு மிகுந்த காலதாமதம் செய்து வருவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்அறிக்கைகளை உடனடி யாக வெளிப்படுத்த வேண்டுமென இக்குழு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்தி: பேராசிரியர் வி.பாரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top