திருவண்ணாமலை, காந்தி நகரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.
விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத் திருவிழா, புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசியது:
கருணாநிதி ஆட்சியில்தான் சென்னை, கோட்டூா்புரத்தில் அண்ணா நூலகம் கட்டப்பட்டது.
இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும், அறிவு வளரும், ஒரு மனிதன் கற்பதின் மூலமாக தான் அனைத்தையும் பெற முடியும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை எடுத்துக்காட்டாக அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் அடையாளமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 4634 நூலகங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயங்கி வருவதாக தெரிவித்தார்.
விழாவில், வருவாய்த்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.4.17 கோடியில் 1,278 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மேலும், புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை அவா் பாா்வையிட்டாா்.