நாமக்கல்:
கொல்லிமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் கொல்லிமலை அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமான கொல்லிமலை, கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளன.
இப்பகுதியில், ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. மலையின் அடிவாரத்தில், முத்துகாப்ட்டி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கொல்லிமலையின் அடிவாரப்பகுதி அமைந்துள்ளது.
நேற்று காலை அப்பகுதியில் கடும் வெப்பநிலை நிலவியது. இதனால் அங்கு இருந்த, வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் உள்ளட்ட பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகொடிகளில் தீப்பிடித்து பெரும் புகையுடன் தீ பரவியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் தீயைணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுந்து முழுமையாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.