Close
நவம்பர் 21, 2024 7:52 மணி

உலக மகளிர் தினத்தன்று கோரிக்கையை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் உள்ளிருப்பு போராட்டம்..!

மோகனூர் தாலுகா, பெரமாண்டம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் காந்தாமணியிடம், பி.டி.ஓ. கீதா பேச்சு வார்த்தை நடத்தினார்.

மோகனூர்:
கோரிக்கையை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தன்று, பெண் பஞ்சாயத்து தலைவர், 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மோகனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பெரமாண்டம்பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் காந்தாமணி. அவர் மீது, 2022ம் ஆண்டில், பஞ்சாயத்தை சரிவர நிர்வாகம் செய்யவில்லை என கூறி, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை 11 மணிக்கு, பஞ்சாயத்து அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. அங்கு பஞ்சாயத்து தலைவர் காந்தாமணி வந்தார். கூட்டம் முடியும் நிலையில், பஞ்சாயத்து செயலாளர், மக்கள் நல பணியாளர் ஆகியோர் அலுவலகத்துக்குள் இருந்தனர்.

அப்போது, திடீரென பஞ்சாயத்து தலைவர் காந்தாமணி, அலுவலகத்தின் உள்பகுதியில் இருந்து கொண்டு கதவை பூட்டி உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் பி.டி.ஓ.க்கள் கீதா, ரவிச்சந்திரன், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து, பஞ்சாயத்து தலைவர் காந்தாமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரண்டு ஆண்டுகளாக எனக்கு அமர்வு கட்டணம் (சிட்டிங் பீஸ்) வழங்கவில்லை. ஒன்றறை ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வராத வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவருக்கு தெரியாமல், பல பணிகள் நடந்துள்ளது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பஞ்சாயத்து தலைவர் காந்தாமணி முன் வைத்தார்.

அவரது கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி தீர்வு காண்பதாக பி.டி.ஓ., கீதா உறுதி அளித்தார். அதையடுத்து, மாலை 6 மணிக்கு, தனது கோரிக்கைகளை புகார் மனுவாக எழுதி, பி.டி.ஓ., கீதாவிடம் பஞ்சாயத்து தலைவர் காந்தாமணி வழங்கினார். இது குறித்து பி.டி.ஓ., கீதா கூறும்போது, பஞ்சாயத்து தலைவர் காந்தாமணி அளித்துள்ள மனு மீது துறை உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உலக மகளிர் தினத்தன்று, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பெண் பஞ்சாயத்து தலைவர் பகல், 1 முதல், மாலை 6 மணி வரை, 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top