மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருமாள்பட்டி பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக தெருக்களில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. மேலும், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கழிவுநீர் தேங்கி அந்தப் பகுதியில் உள்ள குடிநீரில் கலப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் .
மேலும், வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் வீட்டின் முன்பு தேங்கும் கழிவுநீர் காரணமாக வீடுகளுக்குள் செல்ல முடியாமல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
இது குறித்து, விக்கிரமங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் பலமுறை நேரில் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கழிவுநீரை அப்புறப்படுத்த இன்று அனுப்புகிறோம் நாளை அனுப்புகிறோம் என சாக்கு போக்கு சொல்வதாகவும், இதனால், டெங்கு மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு கழிவுநீர் கால்வாய் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும், வீடுகளின் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் கழிவுநீரை வெளியேற்றவில்லை என்றால், பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து சாலை மறியல் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.