மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது .
இதன் மூலம் வீடுகளை இழந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உணவு இருப்பிடம் இன்றி தவித்து வந்தனர். அவர்களுக்கு தனி நபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தற்போது வரை உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஊராட்சி சார்பில், போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் பைப்புகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்த நிலையில், தற்போது வரை அதனை சரி செய்ய முடியாமல், ஊராட்சி நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது .
இதன் மூலம் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல், சிரமப்படுகின்றனர். மேலும், ஊராட்சியில் போதுமான நிதி இல்லாததால் இந்த குடிநீர் குழாய் மற்றும் பைப்புகளை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில், ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.