நாமக்கல் அருகே துக்க வீட்டில், நாட்டு வெடி வெடித்தபோது ஏற்பட்ட தீப்பொறி பறந்து காரின் டிக்கிக்குள் விழுந்ததால், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. கார் டயர் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு அருகே தாளம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி செல்லம்மாள் (85) வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளத்தைச் சேர்ந்த நகுல்ராஜ் (45) என்பவர், தனது நண்பர் செல்வத்துக்கு சொந்தமான காரில் சின்னதாராபுரம் கன்னிவாடியில் உள்ள ஒரு வெடிமருந்துக்கடையில், 15 நாட்டு வெடி சரம் வாங்கி வந்ததாராம். பரமத்திவேலூர் அடுத்த கொளக்காட்டுப்புதூரை சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் காரை ஓட்டி வந்தார்.
தாளம்பாடியில், இன்று மதியம் 12 மணியளவில், துக்க காரியம் நடந்த வீட்டின் அருகே காரை நிறுத்தி, டிக்கியை திறந்தனர். 2 நாட்டு வெடி சரத்தை அங்குள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டு வெடிகளை பற்ற வைத்தனர்.
வெடிகள் பட படவென வெடித்து சிதறியது. அதில் ஒரு வெடி வெடித்துச் சிதறியதில் ஒரு துண்டு நெருப்பு அருகில் இருந்த கார் டிக்கியில் பறந்து சென்று விழுந்தது. எதிர்பாராதவிதமாக கார் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி சரத்தின் மீது நெருப்பு விழுந்ததால், டிக்கியில் வைத்திருந்த நாட்டு வெடிகளும் வெடிக்க ஆரம்பித்தன.
அதனால் நாட்டு வெடிகள் சரமாரியாக வெடித்து சிதறின. மேலும், டீசல் டேங்கிலும் தீப்பொறி விழுந்ததால் பக்கென தீப்பிடித்து, கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் கிடைத்த நாமக்கல் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் தீப்பிடித்த கார் முழுமையாக எரிந்து கரிக்கூடாக நின்றது. இந்த விபத்தில், கார் பாகங்கள் வெடித்து நாலா பக்கமும் சிதறியதால், பொதுமக்கள் பயந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.