Close
நவம்பர் 14, 2024 4:51 மணி

இடை நின்ற மாணவர்களை கைப்பிடித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கலெக்டர்! குவியும் பாராட்டு

மாணவர்களின் கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்ற கலெக்டர்

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர்பகுதியில் குடுகுடுப்பை இன மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து வந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு அவர்கள் பள்ளிப்படிப்பை தொடராமல் இடை நின்று உள்ளனர். இவ்வாறு இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் படிக்கவைக்கும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பாளையம் புதூரில் 51 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடை நின்றனர். இவர்கள் அனைவரும் குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இதனை அடுத்து அந்த குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பெற்றோர்களை அழைத்தும் , மாணவ மாணவிகளை இருக்கையில் அமர வைத்து , கல்வியின் அவசியம் குறித்தும் கல்வியால் பயன் மற்றும் பலன் குறித்தும் விளக்கமாக பேசினார்.


அப்போது பெற்றோர்கள் தங்களுக்கு கனிகர் எஸ் டி சான்றிதழ் வேண்டும் என முறையிட்டனர். அதற்கு பதில் அளித்த ஆட்சியர் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இந்த சான்றிதழ் வழங்க முடியாது. என்றும் குடுகுடுப்பை இனமென்று பதிவு செய்தால் எம் பி சி பட்டியலில் இதற்கு சாதி சான்றிதழ் வழங்க முடியும் என உறுதி அளித்தார்.
அதன் பிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஒத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிள்ளைகளின் கைபிடித்து அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நடந்தே அழைத்துச் சென்றார். ஒரு சில மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஜிப்பின் பக்கவாட்டு மற்றும் பின்புறப்ப படியிலும் ஏறி நின்று மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இடை நின்ற 51 மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பது குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தப்படும் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இம்மாத இறுதிக்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நிறைவடையும் என தெரிவித்தார்.
கலெக்டருக்கு குவியும் பாராட்டு
இடை நின்றவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top