Close
நவம்பர் 21, 2024 8:34 மணி

கழிவு நீர் கால்வாய் தூர் வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சொக்கிக்குளம், கோகுலே சாலை, அண்ணா நகர், பி.பி.குளம், பி.டி.ராஜன் சாலை, நேதாஜி சாலை, முல்லை நகர், நேருஜி தெரு, நாகனாகுளம் கண்மாய் வரத்து கால்வாய் மற்றும் மறுகால் கால்வாய், ராஜபாண்டியன் தெரு, வ.உ.சி தெரு, மஹாலட்சுமி நகர், தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத இறுதியில் பெய்த கனமழையின் காரணமாக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

இதனையடுத்து, அமைச்சர் பெருமக்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மூலம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செல்லூர் கண்மாயிலிருந்து வெளியேறும் நீரை கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து வைகை ஆற்றிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக, 24 மணி நேரத்திற்குள் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடிந்தது.

மேலும், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணும் நோக்கில் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்வழித் தடங்கள், கழிவுநீர் கால்வாய்களை தொடர்ந்து ஆய்வு செய்து மழைநீர் தடையின்றி செல்ல ஏதுவாக குப்பைகள் சேராமல் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப இக்கால்வாய்களை ஆழப்படுத்திடவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என  தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , வருவாய் கோட்டாட்சியர் சாலினி , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்
பாரதிதாசன் உட்பட மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top