Close
நவம்பர் 21, 2024 3:02 மணி

காளையார்கோவிலில் ஏழை மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

காளையார்கோவிலில் நடைபெற்ற புதிய கட்டடத்திறப்பு விழாவில் பங்கேற்ற மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன், மறை மாவட்ட ஆயர் லூர்து உள்ளிட்டோர்

காளையார்கோவில் சீகூரணியில் “செம்மண் முற்றம்” எனும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையத்துக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செம்மண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் நோயல் தலைமை வகித்தார். அகில இந்திய கிறிஸ்தவ உயர் கல்வி சங்கத்தின் இயக்குனர் அருள்முனைவர் சேவியர் வேதம் மற்றும் மார்டின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன், மறை மாவட்ட ஆயர் லூர்து ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.
மார்டின் குழுமத்தின் சார்பாக ஏழை மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்கும் ‘செம்மண் முற்றம்” எனும் பயிற்சி மையம் திட்டத்திற்காக சீகூரணி எனும் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை செம்மண் அறக்கட்டளைக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.


மேலும் அந்தநிலத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் பயிற்சி மையத்திற்கான கட்டடம் கட்டியதுடன், அம்மையத்துக்கு தேவையான கணினி, மேஜை, நாற்காலிகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக மார்டின் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் பேசுகையில், “மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைப்பதற்கும், வாழ்வின் சவால்களை எதிர் கொள்வதற்கும் பள்ளி படிப்போடு, வாழ்வியல் திறன்கள் மிக அவசியம். ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மார்டின் குழுமமும் இப்பயிற்சி மையத்தினை துவக்கியுள்ளது. ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான ஒரு எதிர்காலத்தை இந்த பயிற்சி மையம் நிச்சயம் வழங்கும் என்று கூறினார்


சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை பெருக்கத்தை கேலி பேசிய வளர்ந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள மனித வள ஆற்றலை கண்டு பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இந்திய மாணவர்கள் தன்னலமற்ற கடுமையான உழைப்பின் காரணமாக தங்களை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தங்களது அறிவுத்திறனை வளர்த்து கொண்டுள்ளனர்.
இது போன்று கிராமப்புற ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை பின்தங்கிய பகுதியான காளையார்கோவில் பகுதியில் செம்மண் அறக்கட்டளை சார்பில் தொடங்கியது பாராட்டுக்குரியது என்றார்.
விழாவில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன முன்னாள் தலைவர் ஜோன்ஸ் ரூசோ, மைக்கேல் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் சிவாஜி, சேவியர் தாஸ், ஒன்றியக்குழுத்தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் திருவருள்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top