Close
நவம்பர் 14, 2024 4:23 மணி

நாமக்கல்லில் அவசரமாக திறக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் : அல்லல்படும் பயணிகள்..!

நாமக்கல் முதலைப்பட்டியில் துவக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம்.

நாமக்கல் :
நாமக்கல்லில் அவசரமாக திறக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் ஹோட்டல்கள் உள்ள அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியூர் பயணிகளும், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

நாமக்கல்லில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நகரின் மையப்பகுதியில் ஒரே பஸ் நிலையம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள், டவுன் பஸ்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் வந்து சென்றன. இரவு பகல் 24 மணி நேரமும் இந்த பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

பஸ் நிலையத்திற்கு அகிலேயே ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்ததால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட தலைநகராகவும், மாநகராட்சியாகவும் வளர்ச்சியடைந்ததால், நகரில் வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இதையொட்டி, நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில், முதலைப்பட்டியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. நாமக்கல் நகருக்கு ரிங் ரோடு அமைக்கும் பணி முழுமையாக நிறைவேறாமல் இருந்ததால், புதிய பஸ் நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் 51 பஸ்கள் நின்று செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு 52 கடைகள் கட்டி வாடகைக்கு டெண்டர் விடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் நாமக்கல் புதிய பஸ் நிலையம் திடீரென திறக்கப்பட்டு, அனைத்து வெளியூர் பஸ்களும், பழைய பஸ் நிலையத்திற்கு செல்லாமல், புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் சேலம், ஈரோடு, கரூர், மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்லாமல் பைபாஸ் வழியாக செல்கின்றன. நாமக்கல் புற நகர் பகுதிகளில் வசிப்பவர்கள், பழைய பஸ் நிலையம் வரை ஒரு பஸ்சில் சென்று, அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ்சில் ஏறி, புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து வெளியூர் செல்லவேண்டிய நிலை உள்ளது.

நாமக்கல் நகரைப் பொறுத்தவரை இரவு 8 மணி வரை மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ் சேவை இரவு 10 மணியுடன் முடிவடைந்து விடுகிறது. இதனால் இரவு 10 மணிக்கு மேல் புதிய பஸ் நிலையம் செல்ல விரும்பும் பயணிகளும், அங்கிருந்து நகருக்குள் வரும் பயணிகளுக்கு சென்றுவர வழியில்லால் மிகவும் திணறுகின்றனர்.

இதனால் இரவு நேரத்தில் புதிய பஸ் நிலையத்திற்கும், பழைய பஸ் நிலையத்திற்கும் சென்று வரும் வகையில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.
திருச்சியில் இருந்து நாமக்கல் வரும் பஸ்கள் நாமக்கல் நகருக்குள் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதற்கு இதுவரை பஸ் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

எனவே அதற்கான பஸ் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் செல்லும் பஸ்கள் வள்ளிபுரத்தில் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும். அங்கிருந்து பயணிகள் பஸ்சில் ஏறினால் ப.வேலூரில் இருந்து சேலம் செல்லும் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாமக்கல் பஸ் நிலையத்தில் 51 கடைகள் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு, அவற்றில் சுமார் 30 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. 2 ஓட்டல்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் எடுத்தவர்கள் இன்னும் கடைகளை அமைக்கவில்லை. சுமார் 5 பெட்டிக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஒரு ஓட்டல் கூட திறக்கப்படாததால், வெளியூர் பயணிகளும், பஸ் டிரைவர் கண்டக்டர்களும் சாப்பிட உணவு கிடைக்காமல் பசியுடன் செல்கின்றனர். பஸ் நிலையத்திற்கு அருகிலும் ஓட்டல்கள் எதுவும் இல்லை. எனவே பஸ் நிலைய ஹோட்டல்கள் திறக்கும் வரை உணவு வழங்குவதற்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

நாமக்கல் நகரில் இருந்து முதலைப்பட்டி சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளதால் ஏற்கனவே உள்ள நேர அட்டவணைப்படி பஸ்களை புதிய பஸ் நிலையம் வரை இயக்க முடியாமல் பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர்.

இதனால் ஒரு சில பஸ் டிரைவர்கள் நேரம் போதாமல், புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்களை ஓட்டிச்செல்லாமல் சேலம் மெயின்ரோட்டிலேயே பயணிகளை இறக்கவிட்டு, பைபாசில் சென்றுவிடுகின்றனர்.

இதனால் பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் மிகவும் சிரமப்படுகின்றனர். சில டிரைவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தவேண்டி அதிக வேகத்தில் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே கலெக்டர் இதற்காக டைம் மீட்டிங் நடத்தி பஸ்களின் நேரத்தை நீட்டித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக புதிய பஸ் நிலையத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top