அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அத்திப்பட்டியில், நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு தனது நிர்வாகிகளுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதலில் உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதல் ஈடுபட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவரமாக தேடி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரியும், அதிமுகவினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேனியில் பதுங்கி இருந்த அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக உறுப்பினர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ஒபிஎஸ் அணியை சேர்ந்த குபேந்திரன், அஜய் உள்ளிட்ட 4 பேரை சேடபட்டி தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.