Close
நவம்பர் 24, 2024 8:13 காலை

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார், போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்தார். அருகில் டிஐஜி உமா, கலெக்டர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டத்தை, மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், எவ்வித தயக்கமும் இன்றி போலீசாரின் உதவியை கோரும் வகையில் தற்போது போலீஸ் அக்கா திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட 323 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 99 கல்லூரிகளுக்கு, 136 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்களாக பெண்கள் பாதுகாப்பிற்காக 1091, 181, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1098 மற்றும் 1930 சைபர் குற்றங்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்து 24 மணி நேரமும் செயல்படுத்தப்படுகிறது.
பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இன்றைய நவீன உலகில் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், கவன சிதறல்கள், மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து தங்கள் குடும்பத்தில் தாய், தங்கையிடம் தெரிவிப்பது போன்று போலீஸ் அக்கா திட்டத்தில் காவல்துறையினரிடம் தெரிவித்து, எவ்வித பிரச்சனையிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
தங்களின் பெயர் மற்றும் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், பெண்கள் பாதுகாப்பிற்காக வன்கொடுமை தடுப்புச்சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், மூத்த குடிமக்கள் பாதுகாப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் முன்னேற கல்வி முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நன்கு கல்வி கற்று பிறருக்கு முன்னோடியாக திகழ வேண்டும் என அவர் கூறினார்.
விழாவில், போலீஸ் அக்கா திட்டம் குறித்த கியு ஆர் கோடு அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஐஜி செந்தில்குமார் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல கல்லூரி இணை இயக்குநர் சிந்தியா செல்வி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top