கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலக பிரசித்தி பெற்றதாகும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில், மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர்.
அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி வரும் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 16-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே, வெள்ளிக்கிழமை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 15/11/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் 16/11/2024 (சனிக்கிழமை) அன்று 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 11 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 05 பேருந்துகளும், ஆக 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி,ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கிட அனைத்து இடங்களிலிருந்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 5,969 பயணிகளும் சனிக்கிழமை அன்று 2,973 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 7,080 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile முன்பதிவு செய்து பயணிக்க App மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.