Close
நவம்பர் 21, 2024 2:49 மணி

மோகனூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை: 7 மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

மதுரை

மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை இடிமின்னலுடன் கனமழை பெய்தது. அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக, வளி மண்டல கீழடுக்கு சுழற்சியாலும், அதன் தொடர்ச்சியாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலும், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில், இன்று அதிகாலை 2 மணி முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

மோகனூர் பகுதியில், அதிகாலை, பயங்கர இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. காலை 5:30 மணி பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, மோகனூர் – ப.வேலூர் ரோடு, வள்ளியம்மன் கோயில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், சுமார் 2 ஆடி உயர் தண்ணீர் தேங்கி நின்றது. அதனால், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

சில வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நின்றது. அவற்றை தள்ளிக் கொண்டு செல்லும் நிலையும் காணப்பட்டது. கிராமப்புறங்களில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த மழையின் போது, மோகனூர் பகுதியில், அதிகாலை 3 மணி முதல், மின் தடை ஏற்பட்டது. மின்துறையில் விசாரித்தபோது, பிரேக்டவுன் என தெரிவித்தனர். அவற்றை சரி செய்தபின், காலை 10 மணிக்கு, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மின் தடை காரணமாக, பேட்டப்பாளையம், மணியங்காளிப்பட்டி, வண்டிகேட், தீர்த்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 7 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
நேற்று காலை 6 மணி முதல், இன்று காலை 6 மணி வரை, 24 மணி நேரத்தில், நாமக்கல் பகுதியில் பதிவான மழை அளவு விபரம்:

மங்களபுரம் 5 மி.மீ.,

மோகனூர் 42 மி.மீ.,

நாமக்கல் 31 மி.மீ.,

ப.வேலூர் 2 மி.மீ.,

புதுச்சத்திரம் 1 மி.மீ.,

சேந்மங்கலம் 15 மி.மீ.,

கலெக்டர் அலுவலகம் 29 மி.மீ.,

கொல்லிமலை 7மி.மீ. என, மொத்தம், 132 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top