Close
ஏப்ரல் 2, 2025 12:53 காலை

பயனாளிகளுக்கு ரூ. 879.46 கோடியில் கடனுதவியை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

சிறந்த கூட்டுறவு நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு கேடயங்களை வழங்கிய அமைச்சர்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.879.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

கள்ளக்குறிச்சியில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மலையரசன் எம்.பி., எம்எல்ஏ.க்கள் காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), உதயசூரியன் (சங்கராபுரம்), மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் முருகேசன் வரவேற்றாா்.

விழாவில், தமிழகப் பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு , சிறந்த கூட்டுறவாளா், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் போன்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுக் கேடயங்களை வழங்கினாா்.

தொடர்ந்து கூட்டுறவுத் துறையில் நடப்பாண்டில் பயிா்கடன், நகைக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால கடன், மகளிா் சுய உதவிக் குழு கடன் என மொத்தம் 1,11,753 பயனாளிகளுக்கு ரூ.879.46 கோடி கடனுதவிகளை வழங்கி அமைச்சா் பேசியது:

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சி காலத்தில் உலகத்திலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய முதல்வா், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 பவுன் நகைக்குள்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளை உள்ளடக்கிய 83 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், 3 மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களும், 2 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும், ஒரு சுய உதவிக்குழு சங்கம் உள்ளிட்ட 115 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 21,525 விவசாயிகள் பெற்ற ரூ.97 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1,428 மகளிா் சுய உதவிக் குழு பெற்ற ரூ.14.38 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 466 மகளிருக்கு ரூ.28.50 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளன.

மேலும் இந்த ஆட்சி எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் கூட்டுறவுத் துறையில் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்  என  அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சொர்ணலட்சுமி, நகா்மன்றத் தலைவா் சுப்பராயலு, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top