நாமக்கல் :
ஜேடர்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பரமத்திவேலூர் தாலுகா, சிறுகினத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (50). இவர் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் ஈரோடு அடுத்த சோழிங்கர்பாளையத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் மற்றும் டெக்கரேஷன் செய்யும் பணிக்காக 5 பேரை சரக்கு ஆட்டோவில் அனுப்பியுள்ளார்.
பணிகளை முடித்துவிட்டு நேற்று விடியற்காலை 2 மணிக்கு தொழிலாளர்கள் 5 பேரும் சிறுகிணத்துப்பாளையம் திரும்பி வந்துள்ளனர். ஆட்டோவை வெங்கரையைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டிவந்துள்ளார். கபிலர்மலை அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரியும் சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சிறுகிணத்துபாளையத்தைச் சேர்ந்த சக்திநாதன் (18), பூமிஸ் (19), கருக்கபாளையத்தைச் சேர்ந்த சிவா (18) மற்றும் கபிலர்மலையைச் சேர்ந்த சாமிநாதன் (42), ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய நபர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து 5 பேரையும் மீட்டனர். அப்போது சக்திநாதன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்ற 4 பேரும் ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செல்லும் வழியில் சிவா, பூவேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சாமிநாதன், ரமேஷ் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலையில் மழை பெய்ததால் எதிரே வந்த வாகனம் தெரியாமல் விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மேட்டூரை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (42) என்பவரை தேடி வருகின்றனர்.