Close
நவம்பர் 18, 2024 12:30 மணி

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய வசதிகளை துவக்கி வைத்த அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய வசதிகளை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்கும் வகையில் ரூ.36 இலட்சத்தில் புனரமைக்கப்பட்ட மின்தூக்கி சேவையையும் தொடங்கி வைத்து, ரூ. 2 இலட்சம் மதிப்பீட்டில் உள்நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கும் தட்டுகளையும், முகம் மற்றும் வாய் பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பற்பசை மற்றும் பல்துலக்கி ஆகியவற்றை வழங்கி, ரூ. 110 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் 600 படுக்கைகள் கொண்ட புதிதாக தரைதளம் மற்றும் ஆறு மாடியுடன் கூடிய அனைத்து மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தினை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு சென்று வர உபயோகித்த மின்தூக்கிகளில் ஒன்று பழுதாகி போன நிலையில் ஒன்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. பழுதாகியிருந்த மின் தூக்கி தற்பொழுது ரூபாய் 36 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு இன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

மேலும் நோய்த்தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தாமதமின்றி கிருமிகளை வேகமாக கண்டுபிடிப்பதற்காக ரூபாய் 1.30 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ கருவியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்த கருவியின் மூலம் நோயாளிகளுக்கு விரைவில் அவர்களுக்குரிய நோயின் கிருமிகளையும் அதற்குரிய மருந்துகளையும் கண்டுபிடித்து சிகிச்சைகள் வழங்கிடும் வகையில் அதன் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நோயாளிகள் பலர் தயார் நிலையில் வருவதில்லை. அவர்கள் உணவு அருந்துவதற்கு தட்டு எடுத்து வர முடிவதில்லை. ஆகவே, அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு அவர்களுக்கு சரியான, கண்ணியமான முறையில் சென்று அடையும்படி கொடுப்பதற்காக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் 500 எண்ணிக்கையில் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில்; பாதுகாப்பான தட்டில் உணவு வழங்கும் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் தாடை மற்றும் முக காயம் அடைந்து வாய் திறக்க முடியாத நோயாளிகளுக்கு வாய் சுத்தம் பேணுவதற்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவசமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பல்துலக்கும் பிரஷ் மற்றும் பற்பசை வழங்கும் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் உதயாஅருணா,, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top